Monday, November 2, 2020

அகநானூறு 355 - நீயோ பொருள் விரும்பி சென்று விட்டாயே...


எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும் என்று கவிஞர் தாமரை எழுதிய வரிகள் இந்த அகநானாறு பாடலைப் படிக்கும்போது நினைவுக்கு வருகின்றது. தலைவன் தன்னருகிலேயே இருக்க வேண்டும் என்ற உணர்வு அன்றும் இன்றும் என்றும் தலைவியிடம் இருக்கின்றது.
அகநானூறு 355, தங்கால் பொற்கொல்லனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது என் வார்த்தைகளில்:
மாமரங்கள் அழகிய தளிர்களை ஈன்றுவிட்டன;
மரக்கொம்புகளில் குயில்கள் இனிய குரல்களால்  கூவுகின்றன;
மரங்கள் முதிர்ந்த இலைகளை உதிர்த்து அதன்
பெரியகிளைகளில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன;
இசை வல்லோன்  தடவும் யாழ் நரம்பு மென்மையான
இசையை மீட்டுவதுபோல் வண்டுகள் ரீங்காரமிடுகின்றன;
தெளிந்த நீரோடைக்கு அருகில் தூய மணல் மேட்டில்
பூக்களின் மகரந்தம் ததும்பும் குளிர்ந்த சோலையில்
காதலர் தங்கி தமது செல்வ மனையை மறக்கும்
இளவேனில் காலமும் வந்துவிட்டது; ஆதலால் தோழியே
இடைவிடாது கைகளில் இருந்து வழுக்கி விழும்
மின்னும் வளையல் உடைய நம்  துன்பத்தைக் காட்டி
‘என்னைத் தனித்திருக்க விட்டுவிட்டு,
நீயோ பொருள் விரும்பி சென்று விட்டாயே;
இது உன் தகுதிக்கு உகந்தது அல்ல” என்று
தலைவனிடம் கூறி வெறுத்து வருவோம்.



பாடல்:

மாவும் வண் தளிர் ஈன்றன; குயிலும்
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்;
மூதிலை ஒழித்த போது அவிழ் பெருஞ் சினை,
வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை
நரம்பு ஆர்த்தன்ன வண்டினம் முரலும்; 5
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர்,
தாது உகு தண் பொழில் அல்கி, காதலர்
செழு மனை மறக்கும் செவ்வி வேனில்
தானே வந்தன்றுஆயின், ஆனாது
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப் 10
புலந்தனம் வருகம்; சென்மோ தோழி!
'யாமே எமியம் ஆக, நீயே
பொன் நயந்து அருள் இலையாகி,
இன்னை ஆகுதல் ஒத்தன்றால்' எனவே.

 


No comments:

Post a Comment

சிறுகதை: நிலை - எழுத்தாளர் வண்ணதாசன்

ஒரு தேர்த் திருவிழா… ஒரு குழந்தை தொழிலாளி… இரண்டும் பேசும் உண்மை! ஒரு தேர்த்திருவிழாவின் வழியே, ஒரு பன்னிரெண்டு வயது சிறுமியின் வாழ்க்கையைப்...