Wednesday, September 21, 2022

வீடும் வீடல்ல

வீடும் வீடல்ல

என் வீட்டில் எற்பட்ட
திடீர் வெறுமையினால்
கதிரவனையும் வர விடாமல்
கதவை பூட்டிவிட்டது மேக இருள்
குழந்தைகள் பள்ளிக்குச் சென்றதும்
தடக் தடக் என்று
நேர வரையரையின்றி
தட்டி எழுப்பி
ஓங்கி ஒலித்த கால்களின்
ஓட்டமின்றித் தவிக்கின்றது தரை
முழுநேரமும் கோடை விடுமுறையில்
கமகமக்கும் நறுமணத்திலும்
சலசலக்கும் நீரின் அலம்பலிலும்
கலைந்து கிடந்த சமையலறை
கட்டித் தழுவ ஆளினின்றி
மெளனமாய்க் காத்திருக்கின்றது
வம்பிழுத்து இடிமுழக்கம் நடத்திய
குரல்களின் சொற்கள்
சுவற்றினுள் கரைந்து
தேங்கிக் கிடக்கின்றன நினைவுகளில்
காற்றும் வழிமறந்த
நிசப்த வீட்டில்
நீண்டு கொண்டேயிருக்கின்றது நேரம்
இப்பொழுது
வீடும் வீடல்ல.
-சுபா காரைக்குடி

குறுந்தொகை 32

காதலில் பிரிவு எளிதானதா என்ன?


காதல் வானத்தில் பறக்க வைக்கும். மலையைக் கூடத் தன் பக்கம் அசைத்து விடும். தொலைந்து போன உற்சாகத்தையும், வாழப்போகும் வாழ்க்கையில் புது உத்வேகத்தையும் பரிசளித்து உயரத்தில் பயணிக்க வைக்கும். அந்தக் காதல், சிலருக்கு மனதுக்குள் மலராய் பூத்துப் பின் முள்ளையும் கூடவே வளர விட்டு குத்திக் கிழித்து விடும்.


கனத்த மனத்தோடு காதல் பிரிவில் சுற்றி, எப்படியாவது சரி செய்து விடமாட்டாமா என்று ஏங்க வைக்கும். நினைத்த காதல் விட்டுப் பிரிந்தால், இனி எதற்கு உயிர் வாழ வேண்டும் என்று மாய்த்துக் கொள்ளவும் தோன்றும்.


காதலைப் பிரிந்த தலைவன் இரந்து நிற்பதை, பாண்டிய நாட்டில் சிறந்து விளங்கிய அள்ளூர் என்னும் ஊரில் தெளிந்த புலமையுடன் விளங்கிய, சங்க இலக்கியப் பெண் புலவர்களில் ஒருவரான அள்ளூர்_நன்முல்லையார் அழகாக எடுத்துரைக்கிறார்.


தலைவியிடம் தன் காதலை எப்படியாவது உணர வைக்க வேண்டும் என்று தலைவியின் தோழியைச் சந்திக்கிறான் தலைவியைப் பிரிந்த தலைவன்.


தோழியோ தலைவனிடம், ‘அவள் இனி வரமாட்டாள். அவளைப் பார்க்க முடியாது. அதற்கு நான் உதவவும் முடியாது’ என்பதாகக் கூறுகிறாள்.


அதைக் கேட்டுத் திகைத்த தலைவன் தன் நிலையைத் தோழியிடம் கூறினாலாவது அவள் மனம் இரங்கமாட்டாளா என்று நினைக்கிறான். ஆனால், அதற்குத் தோழி உதவிட வேண்டுமே?!.


தோழியை நமக்கு உதவி செய்ய வைக்க அவளிடம் தன் நிலையைக் கூறி, இரந்து நிற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்த தலைவன், தோழியின் பின்னே இரந்து நிற்கிறான்.


தனக்கோ, காதலித்த தலைவிக்கோ பழி வராமல் தன் காதலை உணர்த்தி, அவள் காதலை வெல்வதற்குத் தோழியிடம் தன் காதலை எடுத்துரைக்கிறான்.


தோழியிடம், ‘காலைப் பொழுது, உச்சிப் பொழுது, பிரிந்தோர் வருந்தி செயலற்ற நிலைக்குத் தள்ளப்படக் காரணமாக இருக்கும் மாலைப் பொழுது, ஊரினர் உறங்கும் நள்ளிரவு, விடியற்காலை ஆகிய நேரங்களில் அவ்வப்பொழுது மட்டும் காதல் தோன்றுமாயின், அத்தகைய காதல் பொய். உண்மையானது அன்று. ‘ என்கிறான்.


அத்துடன் விடாமல் தொடர்ந்து தன் காதலின் உயர்வை வெளிப்படுத்த,


‘நான் குதிரையென்று எண்ணிக்கொண்டு பனை மடலால் செய்த குதிரையின் உருவத்தின் மேலே அமர்ந்து தெருவில் மடலேறினால், யாவரும் தலைவி எனக்கு அளித்த துயரத்தால் தான் நான் இப்படிச் செய்கிறேன் என அறிய வரும். அதனால் தலைவிக்குப் பழி வரும். நான் அச்செயலை செய்யத் துணிய மாட்டேன். ‘ என்கிறான்.


சரி இப்படிச் சொல்லி முடித்துச் சென்று விட்டான் என்றால் அதுவும் இல்லை.


‘மடலேற மாட்டேன். அதைச் செய்யாது, நான் உயிரோடு வாழ்தலும் எனக்கு அரிது.’ என்று கூறி முடிக்கிறான்.


காலையும் பகலும் கையறு மாலையும்

ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்

பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்

மாவென மடலோடு மறுகில் தோன்றித்

தெற்றெனத் தூற்றலும் பழியே

வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.

-குறுந்தொகை 32, அள்ளூர் நன்முல்லையார்



அதாவது, தலைவன் உயிர் நீத்தலே நன்று என்று தலைவன் தோழிக்கு இரக்கம் உண்டாகும்படியும், தான் இறப்பதற்குத் தயாராக உள்ளதையும் குறிப்பிட்டு இரங்கி நிற்கிறான்.


மாலை நேரமானது தொன்று தொட்டுக் காதலர்களை மயக்கிக் கொண்டு தான் இருக்கின்றது போலும். அதிலும், காதல் பிரிவில் வாடும் காதலர்களுக்குக் கொடுந்துயரத்தை காலந்தோறும் தந்து கொண்டுதான் இருக்கின்றது என்பதை இந்தப் பாடலிலும் “கையறு மாலை” என்று மாலையில் காதல் நோய் தன்னை மிகுதியாகத் துன்புறுத்துவதைக் குறிப்பிடுவது மூலம் அறியலாம் .



திருக்குறளில் கூட,

“காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி,

மாலை மலருமிந் நோய்” (குறள் 1227) என்று திருவள்ளுவர் காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்பி பகலில் முதிர்ந்து மாலைப் பொழுதில் மலர்ந்து விடுகிறது என்று கூறியிருக்கிறார்.


தலைவன் தன் காதலை, காதல் பிரிவினால் ஏற்பட்ட நிலையை எவ்வளவு அழகாகத் தோழியிடம் வெளிப்படுத்தியிருக்கிறான். அள்ளூர் நன்முல்லையார் இந்தப் பாடலைப் படித்த நம்மையும் தூது போக வைத்து விடுவார் போல இருக்கின்றது.




சுபா காரைக்குடி.





சிறுகதை: நிலை - எழுத்தாளர் வண்ணதாசன்

ஒரு தேர்த் திருவிழா… ஒரு குழந்தை தொழிலாளி… இரண்டும் பேசும் உண்மை! ஒரு தேர்த்திருவிழாவின் வழியே, ஒரு பன்னிரெண்டு வயது சிறுமியின் வாழ்க்கையைப்...