1987 ஆம் ஆண்டு சாகித்ய அகடாமி விருது பெற்ற ஆதவன் அவர்களின் ‘ஒரு அறையில் இரு நாற்காலிகள்’ சிறுகதை நட்பின் உளவியலை ஆழமாக ஆராய்கிறது. மன உளைச்சலில் இருக்கும் நண்பருக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது இந்தக் கதை.
தில்லியில் மத்திய சர்க்கார் அலுவலகத்தில் வேலை பார்ப்பவரும், எழுத்தாளருமான கைலாசம் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அகர்வாலுடன் ஒரே அறையில் வேலை செய்ய வேண்டிய சூழல். தமிழ் கற்றுக் கொள்ளும் விருப்போடு கேள்வி கேட்பது, சாம்பார் பிடிக்குமெனக் கூறுவது என்று பலவிதங்களில் கைலாசத்தைக் கவர அகர்வால் முனைப்பெடுக்கிறார்.
ஆனால், கைலாசம் அவரை விலக நினைத்துக் குற்ற உணர்ச்சியில் விலகவும் முடியாமல், நெருங்கவும் மனமில்லாமல் இந்தச் சூழலை எப்படிக் கையாளலாம் என்பதறியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.
அகர்வால் மதிய உணவிற்குக் கூப்பிடும்பொழுது ஒவ்வொரு முறையும் எதையாவது சொல்லித் தட்டிக் கழிக்கும் கைலாசத்திற்கு ஒரு நாள் அவர் நண்பர் ராமு வருகிறார். அவருடன் உணவருந்தும் வேளையில் கைலாசம் அகர்வால் மீதான நட்பைப் பற்றி வருத்தத்துடன் கூறுகிறார். ராமுவும் கைலாசமும் இந்த நட்பினைக் குறித்து ஆழமாக உரையாடி ஆராய்வதே இந்தக் கதை.
எதன் அடிப்படையில் நட்பு உருவாகிறது? நம்மால் சிலரிடம் ஏன் நெருங்கி நட்பு கொள்ளமுடியவில்லை? சிலரை ஏன் பார்த்தாலேப் பிடிக்கவில்லை? சில நட்புகள் லவ்-ஹேட் உணர்வுகளில் ஏன் சிக்குகிறது? பிடிக்காத உறவை ஏன் விட்டு விலக முடியவில்லை? உறவை ஆரம்பிக்கும் போது ஆர்வமாக ஆரம்பித்து பின் ஏன் தொடர முடியவில்லை?
இப்படியான பல கேள்விகளை இந்தக் கதை அலசுகிறது. நான் அனைவருடனும் அன்பாகப் பழகுவேன், என்னை அனைவரும் எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளும்படியாக இருப்பேன் என்ற கர்வமே ஒரு உறவை விட்டு விலக முடியாமல் போகிறதோ? தாழ்வு மனப்பான்மை ஓர் உறவைப் பிரிக்கிறதோ? எல்லாவற்றையும் குழப்பி, எதிர்பார்ப்பை அதிகரித்து உறவை எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லையா?
இப்படிப் பல எண்ணங்களை ஆராய வைக்கும் இந்தக் கதை உறவின் சிக்கலை அறிந்து கொள்ள விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய சிறந்த கதை.