Thursday, August 14, 2025

சிறுகதை: நிலை - எழுத்தாளர் வண்ணதாசன்


ஒரு தேர்த் திருவிழா… ஒரு குழந்தை தொழிலாளி… இரண்டும் பேசும் உண்மை!

ஒரு தேர்த்திருவிழாவின் வழியே, ஒரு பன்னிரெண்டு வயது சிறுமியின் வாழ்க்கையைப் பார்க்க நேரிட்டது. கோமு என்ற குழந்தை தொழிலாளர்,. வீட்டு வேலைக்காக ஒரு குடும்பத்தில் தங்கி இருக்கிறாள்.

அவளது அப்பா, அவருக்கு உணவு தேவைப்படும்பொழு மகளைக் காண வருகிறார். சாப்பிடுகிறார் போய் வருகிறேன் என்று சொல்லாமலே போய்விடுகிறார். இந்தக் குடும்பத்தின் உச்சகட்ட வறுமையின் தாக்கத்தை இந்த வரிகளில் உணர முடிகிறது.

தேர்த்திருவிழாவிற்கு எல்லாரும் சென்ற பின், அந்தச் சின்னப் பெண் தனியாக இருக்கையில், “இன்றைக்கு அப்பா வந்தா நல்லா இருக்கும்…” என்று நினைப்பது மனதை பிசைகிறது. மூன்று வேளை சாப்பாடு, தங்கும் இடம், இதற்காக ஒரு குழந்தை தன் பெற்றோரை விட்டு யாரோ ஒருவர் வீட்டில் தொழிலாளியாக வாழ்கிறாள்.

காமராஜரின் மதிய உணவுத் திட்டம், குழந்தைகளின் பசியைத் தீர்த்து கல்வியின் பக்கம் இழுத்து சமுதாயத்தின் பெரும் மாற்றத்தை உருவாக்கியதை மனம் அசை போடுகிறது.

குழந்தை தொழிலாளிகள் தடை விதிப்புச் சட்டமும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்ததை நினைவு கூர்ந்தது இந்தக் கதை.
இந்தக் கதை இவ்வளவில் முடிந்துவிடவில்லை.

தேர் விழாவிற்காக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் செல்லும் போது, கோமுவை வீட்டு வேலையையும், வயதான பாட்டியைப் பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு செல்கிறார்கள். பாட்டி தொடர்ந்து கேள்வி கேட்டு நச்சரிப்பவள். முதலில் பாட்டியிடம் பேசாமல் வெளியில் சென்று தெருவை வேடிக்கை பார்த்தவள், பின் இருளில் கவலையும் தனிமையும் தாக்க பாட்டியிடம் பேச சென்றதில் அந்தச் சின்னப் பெண்ணின் கவலை புரிந்தது.

‘உன்னை விட்டுப் போயிட்டாங்களா? நீயும் போ…” என்ற பாட்டியின் வார்த்தைகள் ஆறுதல் தர, அன்புடன், “சுடு தண்ணி வேணுமா?” என்பதும் கால் பிடித்து விடுவதுமாக இருக்கும் அந்தப்பெண் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் ஏங்குவதை காண முடிகிறது.

நமது நிலையைப் புரிந்துகொண்டு நமக்கு ஆறுதலாக இருப்பவர்கள் மேல் நமக்கு பல மடங்கு அன்பு பிறந்து விடுகிறது என்பதைக் காணலாம். அன்பு செய்து அன்பைப் பெறலாம்.

தேர் பார்த்து விட்டு வந்தவர்கள், வீட்டிற்குள் வந்ததும் ‘தண்ணி பிடிச்சு முடிச்சாச்சா’ என்று ஒவ்வொரு கேள்விகளாய் அடுக்கி, பின் அந்தப் பெண்ணை கடைக்கு வெளியில் செல்ல வைக்கிறார்கள். அவள் வெளியே செல்லும் பொழுது தேரைப் பார்த்து, அதை இழுக்க அவளுக்கு ஆசை. தேரும் அந்த இடத்தை விட்டு நகர ஆவலாக இருந்தது. ஆனால் அவள் தேரை நிலையாக விட்டு விட்டு நகர்கிறாள்.

இந்தக் கதையின் முடிவு கோமுவின் வாழ்க்கையும் சிந்திக்க வைத்து மனக்கணத்தை அளித்தது.

சுபா காரைக்குடி

Wednesday, May 7, 2025

ரோம் அல்லது ரோமா? Rome Vs Roma ?

பாபுவிடம் வம்பிழுத்துக் கொண்டே  இருப்பது எனக்குப் பிடித்த பொழுது போக்கு. வரலாற்றிலும் தத்துவத்திலும் ஆர்வம் மிக்க பாபுவிடம், வம்பிழுக்காமல் ஐரோப்பாவில் விடுமுறையைக் கொண்டாடினால், கொலைக் குற்றமாகிவிடும். அந்த நல்ல எண்ணத்தில், அவனிடம்  ’நாம் ஏன் ரோம் என்று சொல்கிறோம், இங்கு ரோமா என்று சொல்கிறார்களே, நாமும் ’ரோமா’ என்று அழைக்க வேண்டியது தானே’ என்றேன்.  இதுவே ரோமில் காலடி எடுத்தவுடன் ஆரம்பித்த  முதல் விவாதமாக இருந்தது.


ரோமாவின்  அழகு அதன் பண்டைய வரலாறு ,  கலை  மற்றும் வீதிகளின் கோலாகலம். தெருக்களில் கடைகள்,உணவகங்கள், மக்கள் நடமாட்டம் என உயிரோட்டமாக இருக்கின்றது. 



‘ரோமா என்று சொல்வது இத்தாலியன் ஸ்டைல் pronunciation அம்மா, ரோம் என்றால் ஆங்கில முறையில் வரும். அவரவர்கள் மொழிக்குத் தகுந்த மாதிரி தானே எழுதவும் உச்சரிக்கவும் முடியும்.’ என்று நான் நினைத்தது போலவே பதில் சொன்னான் பாபு. 


காரசாரமாக  விவாதத்தைத் தொடர்ந்து, ரோமாவின் பிரபலமான இடமான Spanish Steps வந்தோம். இது 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு அழகான படிக்கட்டுத்தொகுப்பு. மொத்தம் 135 படிக்கட்டுகள் உள்ள இந்த கட்டிடம், பியா milldi ஸ்பாக்னா (Piazza di Spagna) பகுதியை மேல் பகுதியில் உள்ள திரினிதா டெயி மோன்டி (Trinità dei Monti) தேவாலயத்துடன் இணைக்கிறது.

கண்டதும் காதல் இத்தாலி மேல்.  ஊரெங்கும் ஆங்காங்கே அழகிய சிலைகள், நிறைய statue fountain . வாகனங்களை மட்டும் கூட்டமாகப் பார்க்கும் அமெரிக்காவில் இங்கு மக்கள் நடமாட்டம் அழகாக இருந்தது. குறைவான வாகனங்கள்.

இது வெறும் ட்ரயல் தான், இந்த நடை தான் முழுப் பயணத்திலும் இருக்கப் போகிறது என்று தெரிந்தாலும், அதன் ஆழம்  நாட்கள் செல்ல செல்லப் புரிந்தது.

”ஏன் பாபு ஊர்ப் பெயரை அந்த ஊரில் சொல்ற மாதிரியே சொல்ல முயற்சி பண்ணக்கூடாது, நமது மொழிக்குத் தகுந்த மாதிரி நம்ம மாத்திக்கிறோம்? அது தப்பு. நம் பெயரை எப்படி வைத்திருக்கிறோமோ அப்படி அழைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அது அவர்களை மதிப்பது போல் இல்லையா.” என்று நடந்து கொண்டே விவாதத்தைத் தொடர்ந்தேன்.


டிர்வி ஃபவுண்டன்(Trevi fountain) வந்துவிட்டோம். இது   86 அடி உயரம் மற்றும் 161.3 அடி அகலம் உடையது. இந்த நீரூற்று அழகிய வேலைப்பாடு நிறைந்தது. கடல் குதிரைகளால் இழுக்கப்படும் தேரில் அமர்ந்திருக்கும் ஓசியனஸின் மைய உருவம் மற்றும் உருவக பிரதிநிதித்துவங்கள் உள்ளிட்ட சிக்கலான சிற்பங்களுக்கு இது பெயர் பெற்றது.




எல்லாம் நடக்கும் தூரம்தான். பியாஸ்ஸா நவோனா ரோமில் உள்ள மிக அழகான சதுரங்களில் ஒன்றாகும். இது நான்கு நதிகள் உடைய நீரூற்று நெப்டியூன், நீரூற்று போன்ற மிகவும் பிரபலமான நீரூற்றுகளைக் கொண்டது. 


அருகில் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு இங்கே வந்து அமர்ந்தோம்.  ’அம்மா நாம கூட சைனாவை ஏன் தமிழில்  சீனா என்று சொல்கிறோம், அப்படித்தான்மா இங்கேயும்’ என்றான் பாபு.

அதுவும் சரி தான், என்று நான் நான் அமைதியாக வரும் பொழுது, வரும் வழியில் கோஹினூர் ரெஸ்டாரண்டே இந்தியானோ என்ற உணவகம் பார்த்தேன். இந்தியன் உணவகம் என்று புரிந்து கொள்ள கோஹினூர் என்ற பெயர் உதவியது.





Tuesday, March 11, 2025

காட்டில் ஒரு மான் - அம்பை

நீவி விட்டாற்போல் சுருக்கம் இல்லாத முகம், அழகுக் கறுப்பு என்று வர்ணிக்கப்படும் தங்கம் அத்தையைப் பற்றிய கதை. ‘பூக்காத’, பூரணமடையாத தங்கம் அத்தையின் வாழ்வை அழகாகச் சித்தரிக்கிறது இந்தக் கதை. இக்கதைக்குள் கதையை வைத்து, கதை சொல்லியாக தங்கம் அத்தை மான் கதையைச் சொல்லி அந்த படிமத்தின் மூலம் தன் வாழ்வையும், உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறாள். அத்தையின் உடம்பில் ஏற்றாத மருந்தில்லை, வேப்பிலை பூசைகள், திடீரெனப் பயந்தால் முன்னேற்றம் இருக்குமென இரவில் பயமேற்றி விழுந்த காயங்கள், கணவரின் மறு கல்யாணம் பேச்சைக் கேட்டு தற்கொலை செய்ய முயன்று பின் தானே பெண் பார்த்து கல்யாணம் செய்து கொடுத்தது என்றிருந்தது அவள் வாழ்வு.

கதைசொல்லியான அத்தை குழந்தைகளுக்குக் காட்டில் ஒரு மான் என்ற கதை சொல்கிறாள். நன்றாகப் பழகிப் போன காட்டிலிருந்து தண்ணீர் தேடி அதன் வழியே தடம் மாறி புது காட்டிற்குச் சென்றது அந்த மான். எல்லாக்காடுகள் மாதிரியும் பழைய காட்டிலும் வேடன் அம்பு விடுவது, காட்டுத் தீ போன்ற வாழ்வாதாரப் பயமும் சிக்கலும் இருந்தாலும், புதுக் காட்டில் அது மட்டுமே தெரிந்தது அந்த மானுக்கு. பல நாட்கள் பயத்திலிருந்த மான், பின்னர் ஒரு நாளில் அந்தக் காட்டின் பயம் மறந்து, காட்டின் ரகசியம் அறிந்து சாந்தமாகச் சுத்த ஆரம்பித்தது என்று கூறி முடிக்கிறாள் தங்கம் அத்தை. கதை சொல்லி முடித்துவிட்டு, குழந்தைகள் உறங்க, நடு இரவில் முட்டியின் மேல் குத்தி அமர்ந்திருக்கிறாள். இந்தப் படிமத்தின் வழியே தனக்கான வாழ்வை ஏற்று அமைதியாக வாழ்கிறாள் என்பது புலப்படுகிறது.
பௌர்ணமி நிலா வெளிச்சத்தைப் பூசிக் கொண்ட அருவியைப் பார்த்து பயம் போனது, தங்கத்தின் கைவிரல்கள் கறுத்தப் பட்டாம்பூச்சிகளைப் போன்று ஆர்மோனியப் பெட்டியின் மேல் பறக்கும் போன்ற உவமைகள் நிறைந்த இந்தக் கதை ஒரு கவிதை வாசிப்பது போல் இருந்தது. சின்ன வயதில் யாரவது கதை சொல்லிக் கேட்ட நினைவைக் கொண்டு வருகிறது. பூக்காதப் பெண்ணிடம் ஊரே அன்பைப் பெறுவது, அவளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுமாகக் காட்டப்பட்டது.
அந்த இரவுகளை மறப்பது மிகவும் கடினம் என்று ஆரம்பிக்கும் இந்த ’காட்டில் ஒரு மான் கதை’ யை மறப்பது மிகவும் கடினம்.




அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை

ராணியாக  நினைத்த அம்மாவிடம் இருந்து ஒரு பெண் குழந்தை விலகிய தருணத்தையும், அதற்கான சமூகச் சூழலையும் சிறப்பாகக் காட்டுகிறது இந்தக் கதை.


1971 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கதையென்றாலும் பெரும்பாலான இடங்களில் இன்றையச் சூழலுக்கும் பொருந்தும் உணர்வுப்பூர்வமான கதை அம்பையின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’  சிறுகதை. இந்தக் கதை பதின்மூன்று வயது பெண்குழந்தை வயதிற்கு வரும்பொழுது எழும் மெல்லிய உணர்வுகளையும், பெண் குழந்தைகள் என்றாலே கல்யாணம் செய்து தர வேண்டும் என்ற பெற்றோரின் பயமும், அதிலும் பெண் கருப்பு நிறத்திலிருந்தால் கல்யாணத்திற்குத் துணை தேடும் பொழுது சமூகத்தில் வரும் சிக்கல்களையும்  சுட்டிக் காட்டுகிறது. 


அம்மா தான் ராணி. அசுத்தங்களை எரிக்கும் ராணி. அவள் சிரிப்பு,பேச்சு என ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனித்து வளர்கிறாள் அவள். பயம் நிறைந்து ஒரு தருணத்தில் அம்மாவின் ஒரு சொல்லுக்காகவும், மடியில் படுப்பதற்கும் ஏங்கிக் கொண்டிருந்த அவளைச் சுடு சொற்களால் புதைத்து விடுகிறாள் அம்மா. அந்த ஈரமில்லாச் சொற்கள் பட்டாக் கத்தியாய் எழுந்து அம்மாவின் அத்தனை அழகையும் அழிக்கிறதாக உணர்கிறாள்.பெண் குழந்தைகள் கருப்பாக இருந்தால் சந்திக்கும் சங்கடங்களை இந்தக் கதையில் காணலாம்.  அம்மா அவளின் குழந்தைத்தனத்தைக் கொன்று விட்டாள். அம்மாவின் பிம்பத்தைக் கொலை செய்து விட்டாள். 






குழந்தையின் மெல்லிய உணர்வுகளை இந்தச் சமூகம் வீட்டிலும், பள்ளிகளிலும், பொது இடங்களிலும் சுடு சொற்களால் சுட்டு எரிப்பது வழக்கமான ஒன்று தான். குத்திப் பேசுவதையும், பாகுபாடு பார்ப்பதையும் சர்வ சாதாரணமாக நிகழ்த்தி வருகிறது.  சமூகத்தால் குழந்தைகளின் பெரும் மனவலியை, ரணத்தை உணர முடியாமல் போய் விடுகிறது. பயமும் கேள்வியும் நிறைந்து ஆதரவைத் தேடும் குழந்தையை அரவணைத்துப் பேசிப் பழக்கமில்லை. 


அம்மா என்பவள் பெண் குழந்தைகளுக்கு ராணி. அம்மா தெய்வம். அம்மாவே முன் மாதிரி. அவள் அழகை, பேச்சை, புன்னகையை, தைரியத்தை , அன்பைப் பெண் குழந்தைகள் சிலாகிப்பார்கள். அனைத்தும் அம்மாவாகத் தான் இருக்கும்.  பெண்ணின் உணர்வை பூப்போல கையாளாகாமல் விட்டால், அது மாறி விட வாய்ப்புகள் அதிகம். 


அம்மாவும் ஒரு பெண். தன் மனப்போராட்டம், சமூகக் கட்டமைப்பு, குடும்பச் சூழல் என்ற பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் பெண். ஆனாலும், பெற்றோராக சமூகத்தையும் தாண்டி, தங்கள் குழந்தைகளின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது இந்தக் கதையில் தெளிவுறுகிறது.  


அம்மா கொலையும் செய்வாள்,  ஒப்பில்லா அன்பும் தருவாள்.


Wednesday, February 12, 2025

‘ஒரு அறையில் இரு நாற்காலிகள்’, ஆதவன் சிறுகதை

1987 ஆம் ஆண்டு சாகித்ய அகடாமி விருது பெற்ற ஆதவன் அவர்களின் ‘ஒரு அறையில் இரு நாற்காலிகள்’ சிறுகதை  நட்பின் உளவியலை ஆழமாக ஆராய்கிறது. மன உளைச்சலில் இருக்கும் நண்பருக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது இந்தக் கதை.

தில்லியில் மத்திய சர்க்கார் அலுவலகத்தில் வேலை பார்ப்பவரும், எழுத்தாளருமான கைலாசம் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அகர்வாலுடன் ஒரே அறையில் வேலை செய்ய வேண்டிய சூழல். தமிழ் கற்றுக் கொள்ளும் விருப்போடு கேள்வி கேட்பது, சாம்பார் பிடிக்குமெனக் கூறுவது என்று பலவிதங்களில் கைலாசத்தைக் கவர அகர்வால் முனைப்பெடுக்கிறார்.


ஆனால், கைலாசம் அவரை விலக நினைத்துக் குற்ற உணர்ச்சியில் விலகவும் முடியாமல், நெருங்கவும் மனமில்லாமல் இந்தச் சூழலை எப்படிக் கையாளலாம் என்பதறியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். 


அகர்வால் மதிய உணவிற்குக் கூப்பிடும்பொழுது ஒவ்வொரு முறையும் எதையாவது சொல்லித் தட்டிக் கழிக்கும் கைலாசத்திற்கு  ஒரு நாள் அவர் நண்பர் ராமு வருகிறார். அவருடன் உணவருந்தும் வேளையில் கைலாசம் அகர்வால் மீதான நட்பைப் பற்றி வருத்தத்துடன் கூறுகிறார். ராமுவும்  கைலாசமும் இந்த நட்பினைக் குறித்து ஆழமாக உரையாடி ஆராய்வதே இந்தக் கதை.


எதன் அடிப்படையில் நட்பு உருவாகிறது? நம்மால் சிலரிடம் ஏன் நெருங்கி நட்பு கொள்ளமுடியவில்லை? சிலரை ஏன் பார்த்தாலேப் பிடிக்கவில்லை? சில நட்புகள் லவ்-ஹேட் உணர்வுகளில் ஏன் சிக்குகிறது? பிடிக்காத உறவை ஏன் விட்டு விலக முடியவில்லை?  உறவை ஆரம்பிக்கும் போது ஆர்வமாக ஆரம்பித்து பின் ஏன் தொடர முடியவில்லை?


இப்படியான பல கேள்விகளை இந்தக் கதை அலசுகிறது. நான் அனைவருடனும் அன்பாகப் பழகுவேன், என்னை அனைவரும் எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளும்படியாக இருப்பேன் என்ற கர்வமே ஒரு உறவை விட்டு விலக முடியாமல் போகிறதோ? தாழ்வு மனப்பான்மை ஓர் உறவைப் பிரிக்கிறதோ? எல்லாவற்றையும் குழப்பி, எதிர்பார்ப்பை அதிகரித்து உறவை எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லையா? 


இப்படிப் பல எண்ணங்களை  ஆராய வைக்கும் இந்தக் கதை உறவின் சிக்கலை அறிந்து கொள்ள விரும்பும்  அனைவரும் படிக்க வேண்டிய சிறந்த கதை.


Monday, November 14, 2022

செல்லாத பணம் - புதினம்

 நல்ல கல்வியறிவு நிறைந்த குடும்பத்தில் பிறந்து, படிப்போடு சிந்தனையையும் வளர்த்து, தன் வாழ்க்கையை நன்றாகச் செதுக்கும் வாய்ப்பிருந்தும் சில பெண்கள் தவறவிட்டுவிடுகின்றனர். வாழ்க்கைக் குறித்தான அக்கறையும் தெளிவுமின்றி எடுக்கப்படும் பிடிவாதமான முடிவுகள் ஒவ்வொன்றும் ஒட்டு மொத்த வாழ்க்கையின் உயர்வு வீழ்விற்கு வழி வகுக்கும். பணம் எவ்வளவு இருந்தாலும் உதவாமல் போய் விடும்.


அந்த வகையில், எழுத்தாளர் இமையம் எழுதிய செல்லாத பணம் புதினத்தில் (நாவல்), ஒவ்வொரு கதாபாத்திரங்களோடும் நம்மை மூழ்க வைத்து, சிறந்ததொரு வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறார்.

இன்ஜினியரிங் படித்த ரேவதி ஆட்டோ ஓட்டும் அகதி ரவியைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறாள். எத்தனை முயன்றும் மகளின் மனதை மாற்ற முடியாமல் கல்யாணம் செய்து வைத்து ஒதுங்கி நிற்கின்றது குடும்பம்.

ரவி தண்ணியடித்து விட்டு வந்து கொடுமைப்படுத்துவதும், பணப்பற்றாக்குறையும், அவள் இயல்பில் இருக்க விடாமல் வேலைக்குச் செல்வதைக்கூட தடுப்பதும், இரண்டு குழந்தைகளுக்குப் பிறகும் தாழ்வு மனப்பான்மையினால் சந்தேகப்பட்டு வீட்டினுள் அடைத்துப் பூட்டி வைத்துவிட்டு வெளியே செல்வதுமாக ஓடிக்கொண்டிருக்கும் மோசமான வாழ்க்கையில் ஒரு நாள் தீ விபத்துக்குள்ளாகி(விபத்து?!) மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள்.

இங்குத் தொடங்குகின்றது வாசிப்பவர்களின் தவிப்பு. ஏன் இத்தனைக்கும் பிறகு அங்கிருந்து முட்டாள்தனமாகத் தன்னை வருத்திக்கொண்டு இந்த நிலைக்கு ஆளானாள்? அமைதியையும் நல்வாழ்க்கையையும் தராத ஓர் உறவு தேவைப்படுவதற்கான காரணம் அப்படி என்னவாக இருந்திருக்கும் என்ற கோபக் கேள்விகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.

தீக்காயத்தில் தன் மகளைக் கண்டு மயங்கி விழும் அம்மாவிடம், ‘நான் நலம் பெற்று திரும்பி வந்து அந்த வேலைக்குப் போகனும் அம்மா’ என்று உயிருக்காகப் போராடும் ரேவதி தான் செய்த தவறையெல்லாம் திருத்திக் கொள்வதுபோல் கூறுவது அழ வைத்து விட்டது. அவள் பேசுவது மற்றவர்கள் செவியில் விழாமல் அவளோடு நின்று விடுவது பெருந்துயராக இருந்தது.

அம்மா, அப்பா, அண்ணா என அனைவருடனும் மருத்துவமனையில் நகரும் ஒவ்வொரு நொடிகளின் பதட்டமும், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் ‘எப்படியாவது காப்பற்றிவிடுங்கள்" என்ற போராட்டமும், திரு.இமையம் அவர்களின் எளிமையான வழக்கு மொழி நடையும் நல்ல வாசிப்பனுபவத்தைத் தருகின்றன. தொடர்ந்து புத்தகத்தைப் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியவில்லை.

இமையம் அவர்களுடன் என் வாசிப்பனுபவத்தை பகிர்ந்து உரையாடியதில் மட்டற்ற மகிழ்ச்சி.



#செல்லாதபணம் #புதினம்


Monday, November 7, 2022

நட்பு என்ன செய்து விடும்?

 நட்பு என்ன செய்து விடும்?

 

#கபிலர்வேள்பாரி 

 

நாம் மகிழ்ச்சியாகச் சிரித்து மகிழ நல்ல நட்பு வேண்டும்.  அதற்கு மட்டுமா?

 

வாழ்வில் மிக உன்னதமானது நட்பு. வாழ்க்கை சட்டென்று  எதிர்பாராததை எதிர்பாராத நேரத்தில் வழங்கி, திசை தெரியாமல் விழி பிதுங்கி நிற்க வைக்கும்போது நம்மை வழிகாட்ட நிச்சயம்  நட்பே தோள் கொக்கும். இதெல்லாம் கேட்பதற்கும் படிப்பதற்கும் நன்றாகத்தான் இருக்கின்றது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. கடினமான காலத்தில் விட்டுச் சென்றவர்கள் நண்பர்கள் தான். உதவி செய்ய முன் வராததோடு மட்டுமல்லாமல் முதுகில் குத்திச் சென்றவர்களும் நண்பர்கள் தான் என்று நினைக்கலாம். 

 

ஆனால், பொதுவாக மனம் ஆயிரம் நல்லது நடந்து இருந்தாலும், ஒரு சிறு குறையை மட்டுமே அசை போட்டுக் கொண்டேயிருக்கும். உணர்வுகளை ஒருபுறம் தள்ளி விட்டு, நன்றாக சிந்தித்துப் பார்த்தால், நம் கடின காலத்தில் நாம் எதிர்ப்பார்க்காத இடத்திலிருந்து நமக்கு உதவி வந்து புதிய  நட்பு கூட உருவாகி இருக்கும் .

 

திருவள்ளுவர், நட்பு உறவைப் போல் செயற்கரிய செயல் ஏதுமில்லை, அதுபோல் பாதுகாப்பான செயலும் ஏதுமில்லை என்கிறார். 

 

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் 

வினைக்கரிய யாவுள காப்பு.

 

நட்பின் பெருமையை சங்க இலக்கியங்களில் பல இடங்களில் நாம் காணலாம். யாவரும் அறிந்த கபிலர் - பாரி நட்பே அதற்கு ஓர் உதாரணம் எனலாம்.

 

கபிலர் ஆடுவதிலும் பாடுவதிலும் வல்லவர்களான விறலியர்களிடம் தன் நண்பர் வேள்பாரியிடம்  சென்று  பாட்டுப் பாடி பரிசு பெறுமாறு கூறுகின்றார்.  வேள் பாரியை நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டு, பெருமிதத்துடன் தன் நண்பரிடம் செல்லுமாறு சொல்லும் கபிலர்,  வேள் பாரியை எவ்வளவு இனிமையாயனவராகக்  குறிப்பிடுகிறார் இந்தப் புறநானூற்றுப் பாடலில் என்று பார்க்கலாம் .

 

ஒளி பொருந்திய நெற்றியை உடைய விறலியரே,  பெரிய சுனையில் செழித்துப் பெரிய இதழுடைய குவளை மலர்கள் மலர்ந்திருக்க, வண்டுகள் மொய்க்கும் புத்தம் புது மலர்களின் மேல்  குளிர்ந்த நீர்த்துளி சிதறிக் கலக்க - என்று ஊரின் வளத்தைக் குறிப்பிட்டுவிட்டு  ,

 

அடுத்து , அங்கே மழை பெய்தாலும் , பெய்யாமல் போனாலும், நீர் அருவிகள் வழியாக, கொள் பயிரிடுவதற்காக உழுத பரந்த நிலத்தில் வாய்க்கலாக ஒடி, பறம்பு மலையின் மூங்கில் ஏணிகள் உடைய நெடிய மலைச் சிகரங்களிலிருந்து வந்து கொண்டே இருக்கும் என்று குன்றாத நீர்வளத்தைக் கூறி,  

 

 

அந்த  நீரை விட இனிய தன்மையுடையவன் பாரி என்று அழகாக நம் கண்முன் இயற்கையைக் காட்சிப்படுத்தி வேள் பாரி அதையும் விட பெருமைக்குறியவர் என்பதை உணர வைத்து, அப்படிப்பட்ட வேள்பாரியிடம் நீ பாடிச் சென்றால், சிவந்த பொன் நிறமுடைய அணிகலன்களைப் பெறலாம் என்கிறார் கபிலர்.

 

சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி,

தடவு வாய்க் கலித்த மா இதழ்க் குவளை

வண்டு படு புது மலர்த் தண் சிதர் கலாவப்,

பெய்யினும்,  பெய்யாது ஆயினும், அருவி

கொள் உழு வியன் புலத்து  உழைகால் ஆக  5

மால்பு உடை நெடு வரைக் கோடு தொறு இழிதரும்

நீரினும் இனிய சாயல்

பாரி வேள்பால், பாடினை செலினே.

புறநானூறு 105, பாடியவர் –  கபிலர், பாடப்பட்டோன் – வேள் பாரி,

 

 

நட்பிற்கு  இந்த ஒரு பாடல் மட்டும் தானா?! 

 

தொடரும் நட்பு…

 

#கபிலர்வேள்பாரி #சங்கஇலக்கியம் #நட்பு




சிறுகதை: நிலை - எழுத்தாளர் வண்ணதாசன்

ஒரு தேர்த் திருவிழா… ஒரு குழந்தை தொழிலாளி… இரண்டும் பேசும் உண்மை! ஒரு தேர்த்திருவிழாவின் வழியே, ஒரு பன்னிரெண்டு வயது சிறுமியின் வாழ்க்கையைப்...